சென்னை பொது அஞ்சலகத்தில் (ஜி.பி.ஓ), 1000-ஆவது ஒருங்கிணைந்த வங்கிச் சேவை (கோர் பேங்கிங்) தொடக்க நிகழ்ச்சி, சிறப்பு அஞ்சல் உறை வெளியீட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்த வசதியை தமிழக அஞ்சல் வட்டத்தின் தலைமை அஞ்சல் துறைத் தலைவர் டி.மூர்த்தி தொடங்கி வைத்துப் பேசியது:
நாடு முழுவதும் உள்ள அனைத்து அஞ்சலகங்களும் கணினிமயமாக்கப்பட்டு, ஒருங்கிணைந்த வங்கிச் சேவை "கோர் பேங்கிங்' வசதிக்கு மாற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. கோர் பேங்கிங் வசதிக்கும் மாறும் அஞ்சலகங்களில், எங்கிருந்தும் பணப் பரிமாற்றம், பணம் எடுத்தல் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை வாடிக்கையாளர்கள் எளிதாகப் பெற முடியும். கடந்த 2013-ஆம் ஆண்டு, டிசம்பர் 16-ஆம் தேதி, சென்னை கிரீம்ஸ் சாலை அஞ்சல் நிலையம் "கோர் பேங்கிங்' வசதிக்கு மாற்றப்பட்டது.
இது நாட்டிலேயே "கோர் பேங்கிங்' வசதிக்கு மாற்றப்பட்ட முதல் அஞ்சல் நிலையமாகும்.
அதைத் தொடர்ந்து, 228 ஆண்டுகள் பழமைவாய்ந்த கடற்கரை ரயில் நிலையம் எதிரில் உள்ள சென்னை பொது அஞ்சலகம் திங்கள்கிழமை முதல் "கோர் பேங்கிங்' வசதிக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த வசதிக்கு மாறும் ஆயிரமாவது அஞ்சலகம் இதுவாகும். நாடு முழுவதும் இதுவரை, 1,005 அஞ்சலகங்கள் "கோர் பேங்கிங்' வசதிக்கு மாற்றப்பட்டுள்ளன.
தமிழகத்தில் மட்டும் இதுவரை 89 தலைமை அஞ்சல் நிலையங்கள் உள்பட 875 அஞ்சலகங்களை இந்த வசதிக்கு மாற்றியுள்ளோம்.
தொழில்நுட்பக் காரணங்களால், மொத்தமுள்ள 94 தலைமை அஞ்சலகங்களில், திருக்கோவிலூர், சிவகங்கை, நாமக்கல், திருச்செங்கோடு, பெரியகுளம் ஆகிய 5 தலைமை அஞ்சல் நிலையங்கள் ஒருங்கிணைந்த வங்கிச் சேவைக்கு இன்னும் 15 நாள்களில் மாற்றப்படும். இன்னும் மூன்று மாதங்களில், தமிழகத்தில் 23 இடங்களில் ஏ.டி.எம். மையங்கள் திறக்கப்பட உள்ளன என்றார் அவர்.
நிகழ்ச்சியில் முன்னதாக, 1000-ஆவது ஒருங்கிணைந்த வங்கிச் சேவை தொடக்க நிகழ்ச்சியை முன்னிட்டு சிறப்பு அஞ்சல் உறை வெளியிடப்பட்டது.
No comments:
Post a Comment